இப்பொழுது விசானாவிற்கு மாறுங்கள்.
ஒரு முதல் தரமான காப்பீட்டினை வாங்குவதற்கு உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்களுக்குத் தேவையான திட்டத்தை தேர்வு செய்து காப்பீட்டு தொகையினையும் கணக்கிடுங்கள்.
சுவிஸ் நாட்டின் மருத்துவ காப்பீட்டின் அமைப்பு
நீங்கள் சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்த பின் அடிப்படை மருத்துவ காப்பீடு ஒன்றை வாங்குவதற்கு உங்களுக்கு மூன்று மாத கெடு உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் - பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை - அனைவரும் தனித்தனியாக மருத்துவ காப்பீடு ஒன்றினை பெற்று இருக்க வேண்டும்.
இந்த மூன்று மாத கெடுவிற்குள் நீங்கள் ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசியினை வாங்கி விட்டீர்களெனில், நீங்கள் முதன் முதலாக உங்கள் வருகையினை பதிவு செய்த நாள் முதல், ஏற்படுகின்ற அனைத்து மருத்துவ செலவுகளையும் காப்பீட்டு கழகம் ஈடு செய்யும். மேலும் காப்பீட்டுச் சந்தாவும் உங்கள் வருகையினை பதிவு செய்த தேதி முதல் கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்படும். நீங்கள் இந்த மூன்று மாத கெடுவிற்குள் காப்பீட்டு பாலிசி ஒன்றை வாங்க தவறிவிட்டீர்களெனில், நீங்கள் எப்பொழுது பாலிசி வாங்குகிறீர்களோ அந்த நாள் முதலே உங்களுடைய காப்பீடு அமலுக்கு வரும். மேலும் காலம் கடந்து பதிவு செய்ததற்கான கூடுதல் சந்தாவும் வசூலிக்கப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நான் எப்பொழுது சுவிஸ் நாட்டில் காப்பீடு வாங்க கடன் பட்டிருக்கிறேன்?
சுவிஸ் நாட்டில் மூன்று மாதங்களுக்கு மேலாக தங்கும் ஒவ்வொருவரும் சட்டப்படி மருத்துவ காப்பீடு வாங்க கடன் பட்டிருக்கின்றனர். பெரியவர் முதல் சிறியவர்களை குடும்பத்தில் அனைவரும் தனித்தனியாக காப்பீடு வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் வேலைக்காக எல்லை கடந்து வருபவராக இருந்தாலும் சுவிஸ் நாட்டில் கண்டிப்பாக காப்பீடு வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டில் தங்கி இருந்து சுவிஸில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக மருத்துவ காப்பீடு ஒன்றினை வைத்திருக்க வேண்டும். உங்களுடைய தாய் நாடு மற்றும் குடியுரிமை பொருத்து ஒரு சில சமயம் விதிவிலக்குகள் அளிக்கப்படும். விதிவிலக்குகளை பற்றிய தகவல்களை உடல் நல அமைச்சகம் (BAG) தருகிறது.
நீங்கள் கீழ்காணும் பட்டியலில் ஒன்றைச் சார்ந்தவரெனில் காப்பீடு தேவையில்லை:
- நீங்கள் ஒரு EU/EFTA-நாட்டில் பணிபுரிகிறீர்கள் அல்லது ஒரு EU/EFTA-நாட்டில் ஓய்வூதியம் மட்டுமே பெற்று சுவிஸ் நாட்டிற்கு குடி பெயர்கிறீர்கள்.
- நீங்கள் ஒரு EU/EFTA-நாட்டில் இருக்கும் நிறுவனத்தின் வாயிலாக அதிகபட்சம் 24 மாதங்களுக்கு சுவிஸ் நாட்டிற்கு பணி நிமித்தமாக அனுப்பப்பட்டு, தற்காலிகமாக சுவிஸ் நாட்டிற்கு குடிபெயர்க்கிறீர்கள்.
- நீங்கள் ஒரு வெளிநாட்டு தூதரகத்தில் அல்லது ஒரு பன்னாட்டு அமைப்பில் பணி பணிபுரிந்து, அதன் காரணமாக பன்னாட்டு சட்டத்தின் வாயிலாக சில உரிமைகளை பெற்றிருக்கிறீர்கள்.
சுவிஸ் நாட்டின் கட்டாய காப்பீடு விதிமுறை பற்றி மேலும் தகவல்களை இங்கே காணலாம்.
நான் குடி பெயர்ந்த உடனேயே காப்பீடு வாங்க வேண்டுமா?
உங்கள் வருகைக்கு பின் உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் ஒரு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்ய உங்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் உள்ளது. இந்த அவகாசம் புதிதாய் பெற்றோராக ஆனவர்களுக்கும் பொருந்தும். நீங்கள் கருவுற்றிருக்கும் நேரத்தில் சுவிஸ் நாட்டிற்கு குடி பெயர திட்டமிடுகிறீர்களா? எனில் உங்கள் பிள்ளைக்கு பிரசவத்திற்கு முன்பே மருத்துவ காப்பீடு வாங்கலாம்.
நான் எங்கு காப்பீடு வாங்கலாம்?
சுவிஸ் நாட்டில் உள்ள எந்த காப்பீடு கழகத்திலும் நீங்கள் காப்பீடு வாங்கலாம். தற்சமயம் 60 காப்பீடு கழகங்கள் உள்ளன. இதில் விசானா மிகப்பெரிய காப்பீடு கழகங்களில் ஒன்றாகும். சுவிஸ் நாட்டு மக்களில் சுமார் 7% விசானாவில் காப்பீடு பெற்றுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் காப்பீட்டுச் சந்தா ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது?
சுவிஸ் நாட்டின் மருத்துவ கட்டமைப்பு உலகில் மிகச் சிறந்தவற்றுள் ஒன்றாகும். அடிப்படை மருத்துவ சேவை மிகவும் விசாலமானது மற்றும் சிறப்பானது. இச்சிறப்பான சேவையை அளிப்பதற்கான செலவிற்கு ஏற்றவாறு காப்பீட்டுச் சந்தாவும் உயர்வாகவே உள்ளது.
கிராமப்புறத்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் ஏன் என்னை விட குறைவான காப்பீட்டுத் தொகையை செலுத்துகிறார்?
சுவிஸ் நாடு பல்வேறு காப்பீட்டுச் சந்தா மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் நீங்கள் வசிக்கும் மண்டலம் மற்றும் இடம் பொருத்து அதிகமான அல்லது குறைவான காப்பீட்டுச் சந்தாவை கட்ட நேரிடுகிறது
நான் எவ்வாறு காப்பீட்டுச் சந்தா தொகையை குறைக்க முடியும்?
நீங்கள் கழிப்புத்தொகையை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த காப்பீட்டு திட்டத்தினை மாற்றுவதன் மூலம் காப்பீட்டுச் சந்தாவினை குறைக்க முடியும். கழிப்புத்தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ காப்பீட்டுச் சந்தா அதற்கேற்றவாறு குறைவாக இருக்கும். வருடம் தோறும் ஜனவரி 1 அன்று உங்களுடைய கழிப்புத்தொகையினை மாற்றவோ அல்லது சந்தா கம்மியான வேறு ஒரு காப்பீட்டு திட்டத்திற்கு மாறவோ செய்யலாம், உ.ம்., காம்பி கேர் (Combi Care).
நீங்கள் வெளிநாட்டில் மூன்று மாதங்களுக்கு மேலாக தங்கினாலோ அல்லது உங்களுடைய பணி நிமித்தமாக வேறு ஒரு காப்பீட்டு திட்டத்தினை வாங்க நேரிட்டாலோ, உங்களுடைய காப்பீட்டு திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் சந்தா தொகையில் 10% மட்டுமே கட்ட நேரிடும். மேலும் நீங்கள் திரும்பி வந்த பின்னர் உங்களுடைய கூடுதல் காப்பீடுகளை மருத்துவ சான்றிதழ் எதுவும் இல்லாமல் திரும்பத் தொடங்கலாம்.
நீங்கள் இவ்வாறு உங்கள் சந்தா தொகையை குறைக்கலாம்
- நீங்கள் உங்களுடைய சந்தா தொகையினை வருடத்திற்கு இருமுறை செலுத்தினால் நாங்கள் உங்களுக்கு 1% சந்தா தள்ளுபடி அளிக்கிறோம் இதுவே வருடத்திற்கு ஒருமுறை செலுத்தினால் சந்தா தள்ளுபடி 2%-மாக இருக்கும்.
- நீங்கள் பல வருடங்களுக்கு எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் உங்களுக்கு மேலும் சந்தா தள்ளுபடி கிடைக்கும். ஒரு 3-வருட ஒப்பந்தம் உங்களுக்கு 2% தள்ளுபடியையும் 5 வருட ஒப்பந்தம் 3% தள்ளுபடியையும் அளிக்கும்.
- எங்களுடைய புறநோயாளிச் சேவைகளுக்கான கூடுதல் காப்பீடு மூலம் நீங்கள் உடல்நலம் பரிசோதனைகள், உடற்பயிற்சி மையங்கள், மற்றும் உடல்நிலை தேறுவதற்கான ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு CHF 350.- வரை சேமிக்கலாம்.
- எங்களுடைய டிஜிட்டல் போனஸ் திட்டம் myPoints மூலம் நீங்கள் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வதற்கு மற்றும் வாடிக்கையாளர் விசுவாசத்திற்கும் வருடத்திற்கு CHF 120.- வரை பெறலாம்.
நீங்கள் இவ்வாறு காப்பீடு சந்தாவைக் குறைக்கலாம்
நான் அடிப்படை காப்பீட்டுடன் கூடுதலாக விபத்து காப்பீடு வாங்க வேண்டுமா?
நீங்கள் பணியில் உள்ளவராக இருந்து வாரத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு தனியாக விபத்து காப்பீடு தேவையில்லை. உங்களுக்கு நிறுவனத்தின் மூலமோ அல்லது உங்கள் முதலாளி வாயிலாகவோ விபத்து காப்பீடு வாங்கப்பட்டிருக்கும்.
சிறு பிள்ளைகளுக்கு ஏன் கழிப்புத்தொகை கிடையாது?
சிறு பிள்ளைகளுக்கு சட்டப்படி எந்த கழிப்புத்தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை. பெற்றோராக நீங்கள் அவர்களுடைய சிகிச்சை செலவில் உங்கள் பங்கிற்கு செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இது வருடத்திற்கு அதிகப்பட்சம் CHF 350.- ஆகும். ஒரே குடும்பத்திலிருந்து பல குழந்தைகள் விசானாவில் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் உங்கள் பங்களிப்பு அதிகப்பட்சம் வருடத்திற்கு CHF 950.- ஆக இருக்கும்.
சேவைகளின் விவரப்பட்டியலை நான் எவ்வாறு புரிந்து கொள்வது?
நீங்கள் ஏதேனும் சேவையை பயன்படுத்தினால் மட்டுமே உங்களுக்கு சேவைகளின் விவரப்பட்டியல் அனுப்பப்படும், உ.ம்., நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற்றிருந்தால். பொதுவாக சேவைகளின் விவரப்பட்டியலை உங்கள் மருத்துவர் எங்களுக்கு நேரடியாக அனுப்புவார். நாங்கள் உங்களுடைய பங்கை உங்களிடம் இருந்து கேட்பதற்கு முன்பாக உரிய தொகையை அவருக்கு அளிப்போம். புறநோயாளி சிகிச்சைக்கான சேவை விவரப்பட்டியல் பல முக்கியமான விவரங்களை உள்ளடக்கி இருக்கும்.
- காப்பீடு செய்யப்பட்ட நபரைப் பற்றிய தகவல்கள்
- சேவை அளித்தவரைப் பற்றிய தகவல்கள் (மருத்துவர், சிகிச்சையாளர், மருந்து கடை, ஆய்வகம், மருந்துகள் போன்றன)
- சிகிச்சை நாள் மற்றும் கால அளவு
- விவரப்பட்டியலின் வடிவமைப்பு
விவரப்பட்டியலின் முதல் பகுதியில் அளிக்கப்பட்ட சேவை அடிப்படை காப்பீட்டில் அடங்கியுள்ளதா அல்லது கூடுதல் காப்பீட்டின் மூலமாக அளிக்கப்பட்டதா என்ற விவரம் இருக்கும். அடுத்த மூன்று பத்திகளில் கூடுதல் தகவல்களைக் காணலாம்.
- கழிப்புத்தொகை: நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கழிப்புத்தொகையை கொண்டு மருத்துவர், மருத்துவமனை, மற்றும் மருந்துகளின் செலவுகளில் பங்களிப்பீர்கள்.
- சுய பங்களிப்பு: கழிப்புத்தொகைக்கு மேல் அதிகப்படியாக ஆகும் சிகிச்சை செலவுகளில் 90% காப்பீட்டு கழகம் ஏற்றுக்கொள்ளும் மீதம் இருக்கும் 10% தொகையினை (அதிகபட்சம் வருடத்திற்கு CHF 700.-) நீங்கள் சுய பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
- காப்பீடு செய்யப்படாதத் தொகை: அடிப்படை காப்பீடு மற்றும் கூடுதல் காப்பீட்டில் உள்ளடங்காத சேவைகள் அனைத்திற்கான செலவுகளையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பட்டியலுக்கு அடியில் காப்பீட்டு கழகம் சேவை அளித்தவருக்கு எவ்வளவு தொகையினை செலுத்தி உள்ளது என காணலாம். விசானா முழுத் தொகையையும் செலுத்தி விட்ட பின்னர் உங்களுடைய பங்கை உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும்.
ஒரு சில சமயங்களில் நீங்கள் சேவை அளிப்பவருக்கு நேரடியாக பணத்தினை செலுத்தி விடுவீர்கள். அதன் பின்னர் காப்பீட்டுக் கழகத்தின் பங்கினை விசானா உங்களுக்கு அளிக்கும். இந்த பக்கத்தின் அடியில் அந்த வருடத்திற்கான செலவுகளின் பங்களிப்பின் கண்ணோட்டத்தினை காணலாம்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது அளிக்கப்படும் சேவைகளின் விலைப்பட்டியல் ஏறக்குறைய அதே தகவல்களைக் கொண்டிருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது சட்டப்படி பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையில் தங்குதலுக்கான தொகையான CHF 15.-னை நீங்களே செலுத்த வேண்டி இருக்கும். இந்த தகவல், மொத்தத் தொகை, மற்றும் சுய பங்களிப்பு ஆகியவற்றின் விவரங்களை செலவுகளின் அட்டவணையில் காணலாம் இது <Ihr Anteil> என்ற பத்தியின் அடியில் இருக்கும்.
விசானா செயலியினால் எனக்கு என்ன லாபம்?
விசானா செயலியினை ஆப் ஸ்டோர் (App Store) அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். விசானா செயலி மற்றும் மைவிசானா (myVisana) வாடிக்கையாளர் போர்ட்டல் வாயிலாக உங்கள் காப்பீடு சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் ஆன்லைனில் செய்யலாம். வாடிக்கையாளர் போர்ட்டலில் நீங்கள்:
- உங்கள் குடும்பத்தினரின் பாலிசிகள், ரசீதுகள், மற்றும் சேவைகளின் விவரப்பட்டியல்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்
- மருத்துவர்களின் ரசீதுகளைப் புகைப்படம் எடுத்து அவற்றை பதிவேற்றம் செய்து விசானாவிடம் நேரடியாக ஆன்லைனில் அளிக்கலாம். செலவுகளில் விசானாவின் பங்களிப்பு மற்றும் உங்களின் சுய பங்களிப்பு ஆகியவற்றை பரிசீலனை செய்யலாம்
- வெவ்வேறு கழிப்புத்தொகைகளுக்கு சந்தாவினை கணக்கிட்டு உங்களுக்கு விருப்பமான கழிப்புத்தொகைக்கு மாறலாம்
-
உரிமையின் மாறுபாடுகளைச் சரிபார்த்து ஆன்லைனில் மாற்றவும்
- வாடிக்கையாளர் போர்ட்டலில் உங்கள் காப்பீட்டிற்கு தொடர்பான புதிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை push-செய்திகள் மூலம் அறியலாம்
- குடும்பத்தினர் அனைவரின் காப்பீட்டு அடையாள அட்டையினை திறந்து பார்க்கலாம்
- மருத்துவர் மற்றும் மருத்துவமனை ரசீதுகளை அனைவருக்கும் புரியக்கூடிய ஒரு மொழியில் «மொழிபெயர்க்கலாம்»
எங்களுடைய ஆன்லைன் போனஸ் திட்டமான myPoints-ஐ நீங்கள் செயலி மூலம் பயன்படுத்தலாம். உங்களுடைய தினசரி உடற்பயிற்சி/ நடைப்பயிற்சி மற்றும் வாடிக்கையாளர் விசுவாசம் ஆகியவற்றிற்கு வருடத்திற்கு CHF 120.- வரை பரிசாக நீங்கள் பெறலாம்.
நிற்க: விசானாவில் கூடுதல் காப்பீடு பெற்றுள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே myPoints-ஐ பயன்படுத்த முடியும்
சுவிஸ் நாட்டின் சுகாதார செயலியான வெல் (Well) செயலி விசானாவின் செயலியிலும் உள்ளடங்கியுள்ளது. உடல் சுகம் இல்லை எனில் நீங்கள் Doctor Chat வழியாக ஒரு மருத்துவருடன் சேட் செய்யலாம். மேலும் அறிகுறிகளை Symptom Checker வழியாக பரிசீலிக்கலாம் அல்லது ஒரு மருத்துவருடன் ஆலோசனை நேரத்தை பதிவு செய்யலாம்.
நான் செயலியை பயன்படுத்தினால் ஏன் எனக்கு காகித வடிவில் ரசீதுகள் அனுப்பப்படுவதில்லை?
காகிதத்தின் பயன்பாட்டினை குறைக்க காப்பீடு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை நேரடியாக செயலியின் மூலம் மட்டுமே பெறுவார்கள்.
என்னுடைய காப்பீட்டினை எவ்வாறு இரத்து செய்வது?
காப்பீட்டு இரத்து சட்ட விதிமுறைகளுக்கு (KVG/VVG) உட்பட்டது. இரத்து செய்வதற்கான தகவல் எழுத்து வடிவத்தில் சரியான நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். அதாவது காப்பீட்டினை இரத்து செய்வதற்கான தொடங்குவதற்கு முன்னால் உள்ள கடைசி வேலை நாளன்று விசானாவிடம் வந்தடைய வேண்டும்.
அடிப்படை காப்பீட்டினை ரத்து செய்வதற்கான விண்ணப்பக் கடிதம் அதிகபட்சமாக நவம்பர் மாத கடைசி வேலை நாளன்று விசா நாவிற்கு வந்து அடைய வேண்டும் கூடுதல் காப்பீடுகள் அனைத்தும் மூன்று மாதத்திற்கு முன்னால் தகவல் அளித்து ரத்து செய்யப்பட வேண்டும் இதற்கான கடிதம் செப்டம்பர் மாதம் கடைசி வேலை நாளன்று காப்பீட்டுக் கழகத்திடம் வந்து அடைய வேண்டும்.